Rosemary herb in tamil
ரோசுமேரி
ரோசு மேரி (ரோஸ் மேரி; Rosmarinus officinalis) என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு கடல் துளி என்று பொருள்.[2] (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.
வகைப்பாட்டியல்
[தொகு]ரோசுமேரினஸ் என்ற பேரினத்திலுள்ள இரு சிற்றினங்களுள் ரோஸ்மேரினஸ் அஃபிசினாலிஸ் ஒன்றாகும். மற்றொரு சிற்றினம் ஆனது ரோஸ்மேரினஸ் எரியோகலிக்ஸ் ஆகும். இது ஆஃப்ரிக்காவின் வட பகுதியிலும் (மாக்ரெப்) ஐபீரியாவிலும் மட்டுமே இருக்கிறது. இம்மூலிகை ஆனது மிகப்பெரிய புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது.
இத்தாவரம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கையாளரான கரோலசு லின்னேயசால் பெயரிடப்பட்டது. அதன் பிறகு இதன் வகைப்பாட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.